இந்த வாழ்வின் ஒட்டுமொத்த தேடலும் ஒரு நிரந்தர மௌனத்திற்கான தேடலா என்ன? இங்கே நிரந்தர அல்லது எல்லையற்ற மௌனம் என்பது மரணத்தை குறிப்பதல்ல. அனைத்திற்கும் மேலான பேருரு ஞானம். இங்கே "உரு" என குறிப்பிடும்போது அந்த "வஸ்து" என ஒன்று உள்ளது என்று இருப்புணர்த்தல் பெற்றுவிடுகிறது. ஆனால் தன்னிலையிலிருந்து ஒரு அனுபவம் நிகழாமல் அத்தனை எளிதாய் அந்த 'உரு' என்னவென்பதை புரிந்துக்கொள்ளவோ அல்லது உணர்ந்துக்கொள்ளவோ முடியாது. ஆதலாலேயே அவ்வனுபவத்தை இருப்புணர்த்தி 'உரு' என அழைக்கபடுகிறதேயன்றி அவ்வுணர்வு என்பது மெய்மறந்த கால எல்லையில் மௌனத்துடன் மௌனமாக பகுப்பொன்றே இல்லாத நித்தியத்துடன் கலத்தல் என்றே நினைக்கிறேன். பேச்சு, விவாதம், உரை, எழுத்து என எல்லாவற்றின் அந்தம் என்ன? அனுபவத்திலும் பேரனுபவம் என்ன? எல்லா செயலின் விழைவும் நித்தியத்தின் ரசவுணர்தல் என்றாவின், நித்தியம் என்பதே ஒரு வார்த்தைகளற்ற வெளி, மௌனமே புகமுடியாத நிசப்தம், சுழி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பொருத்திக்கொள்ள முடியாத சுழியாவின் எதற்கென்று இவ்வாழ்வு. ஒருவேலை வாழ்வின் சாரமே எல்லையற்ற நிசப்தம்தானோ.
எந்த ஒரு உச்ச நிலையானாலும் அது தன்னை உயர்த்தி நிறுத்தக் கூடிய உயர்நிலை வாழ்வில் எப்போதோ ஏதோ ஒரு கணத்தில் நிகழக்கூடிய ஒன்றே. ஆனால் அதையே நீட்டி முழக்கி காலவோட்டத்தில் பாய்ச்சிட்டால் அவனே கவிஞனாகிறான். அத்தகைய மேலோங்கிய கவிஞனின் உயர்நிலையின் தத்தளிப்பிலிருந்து எழுந்ததுதான் அண்டங்காளி. எந்த ஒரு கவிஞனுக்கும் அவன் தனக்கே உருவாக்கும் கவியுலகம் உண்டு. ஆனால் எந்த ஒரு கவியுலகமும் பெருங்கவியுலக திரட்டின் சுழல்வீச்சில் பாய்ந்திடும் தீப்பற்றிய பொறித்துண்டுதான். அந்த தீயின் உக்கிரமும் உஷ்ணமுமே ஒரு கவிஞனின் தன்னடையாளம். அதை இயல்பென கக்கியிருக்கிறது அண்டங்காளி. சடசடவென ஓடி மெய் அயர மூச்சிறைத்து விருட்டென நின்று பெருந்தாக பசிக்கு அபிஷேகமாய் பொழியும் பெருங்களியமுதமாய் பொழிகிறாள் காளி. பிரபஞ்சம் முழுவதும் அதன் முக்காலம் எங்கும் ஒரு நிலையாய் நிலைப்பெற்ற ஒருத்தியை கவிஞன் தன்னிலையின் நிகழ் தருணத்திற்கு அழைத்து ஒரு பின்னலாய் பின்னி மண்டியிட்டு சரணடைவதும் அதன் மூலமாக அவள் ஜோதியில் கலப்பதும் சில சமயம் அவளிடம் பெற்ற ஜோதியின் துணைக்கொண்டே அவளுடன் சரிசமமாக நிற்பதுமென ஆசை ஒரு கவி தருணத்தை அளிக்கிறார். ...