வணக்கம். நான் சுரேன் சாத்ராக். ஜெ ( Suren Shathrak J). சென்னையில் பிறந்தேன். UKG வரை அங்கேதான் படித்தேன். பொருளாதார சிக்கல் காரணமாக திருவண்ணாமலைக்கு வந்தோம். இதுவரை நான் கழித்த பெரும்பாலான நாட்கள் இங்கு கழித்தவையே. இன்று அங்கேதான் வசிக்கிறேன். இது ஒருபுறமிருக்கட்டும். இப்போது இதை நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் ஜெயமோகனுக்கு நான் 04/02/2024 அன்று ஒரு கடிதம் எழுதியனுப்பியிருந்தேன். அதற்கு அவர் மறுமொழி செய்தால் அதையே இந்த தளத்தின் முதல் பதிவாக வெளியிட எண்ணியிருந்தேன். ஆனால் அவருக்கு வேலைப்பளு அதிகமிருக்கலாம். அல்லது அவருக்கு இது சென்று சேராமலிருந்திருக்கலாம். ஆனால் துவங்கி ஒரு மாதமாக இந்த தளம் அமைதியாகவே கிடக்கிறது. அதனால் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தையே முதல் பதிவாக பதிவிடுகிறேன். இதிலேயே என்னைக்குறித்தான சிறு அறிமுகமும் உள்ளது. ஜெயமோகன் எப்போது மறுமொழி செய்தாலும் இதிலேயே மீண்டும் திருத்தி பதிவிடப்படும். மறுக்கடிதம் வராமல் இருக்கவும் வாய்ப்புண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயமோனுக்கான கடிதம்
நான் உங்கள் தளத்தை கடந்த மூன்று வருடமாக படித்து வருகிறேன். பல சிந்தனைகளை தங்கள் மூலம் பெற்றிருக்கிறேன். உங்களின் அபுனைவே என்னை அதிகம் கவர்ந்த இடங்கள். புனைவை நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். தங்கள் தளத்திலிருக்கும் சிறுகதைகளை படித்திருக்கிறேன். உண்மை என்னவென்றால் வீட்டில் பயங்கர வருமை சூழல். நான் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை. அம்மா மட்டும்தான் வீட்டின் பொருளாதாரத்தை நடத்துகிறாள். சிறுக சிறுக கிடைக்கும் சில்லறைகளை சேமித்து புத்தகம் வாங்கி விடுவேன். கையிலிருக்கும் உடைந்த Smart phone - யை வைத்துக்கொண்டு இன்றுவரை உங்களையும் பல சிந்தனைகளையும் தொடர்கிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு அறிவுசார் ஆர்வம் இருந்துவந்தது. மற்ற எதை காட்டிலும் அறிவார்வமே எனக்கு பிரதான ஆர்வமாக இருந்தது. கேளிக்கை, விளையாட்டு, பிற சிற்றின்பங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமே. ஆனால் என் அறிவுக்கு தீனிப்போடும் வகையில் என் குடும்பச் சூழலோ பொருளாதார சூழலோ அமையவில்லை. அம்மா ஆசிரியர் என்பதால் ஐந்தாம் வகுப்புவரை பள்ளிப்பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறார். அதைத்தாண்டி அவர் என்னுள் முழுவதுமாக விதைத்தது மதக்கல்வியைதான். ஆனால் எதுவும் என்னை எந்தவொரு சட்டகத்துக்குள்ளும் அடைக்கவில்லை. நான் இதுவரை என்னை ஒரு பெரும் உரையாடல் தரப்பாகவே காண்கிறேன். என்னுடைய ஆழ் வேர்கள் முதல்கொண்டு அலைகழிப்பிலேயே உள்ளது. ஒவ்வொரு ஊசலாட்டத்தின் போதும் நான் ஒரு பாயும் வெள்ளத்தைப்போல அதன் வடிவங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்கிறேன். ஒரு பலூனில் நிரப்பப்பட்ட தண்ணீர்போல ஒரே கணத்தில் என் எல்லைகளை விரித்துக்கொள்ளும் அதேநேரம், நான் என் ததும்புதலுக்கேற்ப என்னை உருமாற்றியும் கொள்கிறேன். ஒன்று தவறென உணரும் தறுவாயில் குண்டூசி முனையில் உடையும் பலூனைப்போல என் அடிப்படைகளை உடைத்து என்னை புதுப்பித்தும் கொள்கிறேன். இது உங்களிடம் தொடர்ந்து உரையாட நான் என்னை அறிமுக படுத்திக்கொள்ள எழுதுவது. உங்களை இன்னும் என்னால் ஒரு ஆசிரியராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் உங்களை கடந்தும் போகமுடியவில்லை. அதனாலேயே உங்களிடமே முட்டி மோதி உரையாடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். உங்களுக்கு இதற்கு முன்பே கடிதம் எழுதி இருக்கிறேன். அது தங்களை அடைந்திருக்குமா என தெரியவில்லை. போலவே எனக்கு எழுத்தின் மீதே அதிக ஆர்வம். ஆனால் YouTube channel நடத்த வேண்டும் என ஆர்வமும் இருந்தது. இதை இப்போது முழுக்க Smart phone-ல் தான் செய்கிறோம். பொருளாதார அடிப்படையில் முழுக்க என் மாமன் மகன் உதவியால் மட்டுமே இப்போதைக்கு இது நிகழ்கிறது. சிந்தனைகள் முழுவதும் என்னுடையது. இதை குறித்து நான் உங்களிடம் பின்னர் மெதுவாகவே பகிரலாமென்று நினைத்தேன். ஆனால் உங்களின் பூமர் கட்டுரை படித்தேன். எங்களின் இரண்டாம் வீடியோவும் அதை குறித்துதான். சரியாக நாங்கள் பதிவிட்டு சிறிது நாட்களிலேயே உங்கள் கட்டுரை வந்தது. அப்பொழுதே உங்கள் கவனத்திற்கு கொண்டுவர நினைத்தேன். தயக்கமிருந்தது. இப்போது துணிந்துவிட்டேன். இவை எல்லாம் எந்த ஒரு முன் தயாரிப்புமில்லாமல் ஒரே அமர்வில் பேசியது என்பதால் சில தடுமாற்றங்கள் இருக்கலாம். தமிழ் யூடியூப் மற்றும் தமிழ் இளைய சமூதயத்தை பொறுத்தவரையும் சிந்தனைசார் ஆக்கம் மட்டுப்போய் அனைத்தையும் நுகரும் ஒரு பெரும் தீனிக்கூட்டம்போல எவற்றையும் பகுத்தறியாமல் விழுங்கிக்கொண்டிருக்கிறது. நாளடைவில் இது ஒருவனின் கருத்து மற்றும் சிந்தனைபுலத்தை சேதப்படுத்தி அதன் பின் அவனை எந்த ஒன்றின் மீதும் ஆழ்ந்த கவனத்தையும் ரசனையும் ஆழ்ந்த அக அனுபவத்தையும் கோராமல். அவனை ஒரு உள்ளீடற்ற பிண்டமாக எஞ்சவிடுகிறது. இதற்கு மாற்றாக சிந்தனை தளத்தில் இயங்க முன்வருபவர்களும் முன்வருபவர்களுக்கும் ஒரு மாற்று உரையாடல்தளமாக இது அமையவேண்டும் என இக்காணொளிகளை பதிவேற்றுகிறேன். பொதுவாக சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுடனும் உரையாட நினைத்தாலும் நமக்கென்று ஒரு தரப்பை முன் வைக்காமல் யாரையும் உள்ளீழுக்கவும் முடியாது உரையாடவும் முடியாது. அதனால் இது முதன்மையாக ஒரு அறிவார்ந்த உரையாடலை நோக்கி அழைக்கிறது. ஆனால் இரண்டு வீடியோ கூட வரவில்லை அதற்குள் அவ்வளவு அறிவுரைகள். Jolly, interesting, vibe, entertainment இப்படிலாம் பதிவிடுங்கள் என்று. அதற்கு எதிர்வினையாக நான் வீடியோ பதவிட்டிருக்கிறேன். "இந்த channel யாருக்காக எதற்காக" என்று. உங்களுக்கு நேரம் இருந்தால் பாருங்கள். இல்லையெனில் வேண்டாம். போலவே Blog நடத்தவேண்டுமென எண்ணியிருக்கிறேன். உங்கள் கடிதத்தையே முதலில் பதிவிடுகிறேன். எனக்கு புகைப்படம் எடுக்கும் பழக்கமும் பெரிதாய் இல்லை. அதனால் YouTube-ல் பேசியவைகளிலிருந்து சில Captures. நன்றி.
பி.கு : ஜெயமோகனுக்கு அனுப்பிய படங்களை இங்கு பதிவேற்றவில்லை. தொடர்ந்து பேசுவோம். நன்றி.இன்றைய சிக்கல்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வது நல்ல விஷயம். நல்ல தொடக்கம். வெளிப்படுத்துவது என்னும் செயலே சிந்திக்கவும் செய்யும். பேசப்பேச நாமே தெளிவாகிக் கொண்டே வருவோம்.
ஆனால் ஓர் எல்லையில் நம்முடைய பேச்சு சுழல ஆரம்பித்துவிடும். தன்னியல்பாக சூழலுக்கு எதிர்வினையாற்ற ஆரம்பித்து விடுவோம். எதிர்வினையும் ஒரே புள்ளியில் இருந்து வர ஆரம்பிக்கும். அதை வெல்லும் வழி என்பது நமக்குள் செல்லும் விஷயம் நமக்குள் இருந்து வரும் விஷயத்துக்கு கொஞ்சம் கூடுதலாக இருப்பதாக பார்த்துக்கொள்வதுதான். அதற்கான வழி வாசிப்பு, உரைகள் கேட்பது ஆகியவையே.
பலர் வாசிப்பும் அறிதலும் இல்லாமல் ‘தனக்குள் ஊறும் சிந்தனைகளை’ சொல்வதாக நம்பிக்கொள்வார்கள். ‘எந்த வெளிப்பாதிப்பும் இல்லாமல் அசல் சிந்தனைகளை’ முன்வைப்பதாக எண்ணிக்கொள்வார்கள். அப்படி தன்னிச்சையாக எந்தச் சிந்தனையும் ஊறாது. வெளிப்பாதிப்பு இல்லாத சிந்தனையே இல்லை. ஒரு மனிதனில் உள்ள சிந்தனை அவனுக்கு வெளியே இருந்து அளிக்கப்பட்டு அவன் அனுபவங்களுடன் இணைந்து கொஞ்சம் உருமாறி வளர்ந்த ஒன்றுதான். மாபெரும் தத்துவ ஞானிகளேகூட அத்தகையோர்தான்.
ஒருவர் எதையுமே வாசிக்கவில்லை, அறிவதில்லை என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் இருப்பது என்ன? அவருடைய இளமைக்காலம் முதல் மொழி வழியாகவே அவருக்கு பலவிஷயங்கள் வந்து சேர்கின்றன. குடும்பச் சூழல், கல்விச்சூழல், சமூகச்சூழலில் இருந்து இயல்பாக அவருக்கு பழகிப்போன சிந்தனைகள் வந்து சேர்கின்றன .இன்றைக்கு நம் சூழலில் அரசியல் சார்ந்து, கேளிக்கைகள் சார்ந்து, நுகர்வு சார்ந்து ஏராளமான கருத்துக்கள் நம் மூளைக்குள் திணிக்கப்படுகின்றன. வாசிக்காதவர் , அறிய முயலாதவர் அந்தக் கருத்துக்களை மட்டும் தனக்குள் நிரப்பி வைத்திருப்பார். அதை சுயசிந்தனையாகச் சொல்லிக்கொண்டிருப்பார். அவர் உண்மையில் எதிரொலிதான். ஆனால் அவர் சுயமாக பேசுவதாக நினைத்துக் கொண்டிருப்பார்.
நாம் பேசுவது அசலா என்று அறியவே நமக்கு கொஞ்சம் வாசிப்பும் அறிவும் தேவையாகிறது. பலபேர் சுயசிந்தனை என்று சொல்லும் கருத்துக்கள் சிந்தனைக்களத்தில் அடித்து துவைத்து கிழிந்துபோன கந்தல்களாக இருப்பதைக் காணலாம். வாசிப்பது நம்மை நாமே புதிப்பித்துக் கொள்ள. நம்மிடம் இருக்கும் சொந்தச்சிந்தனைகள் எவை, வெளியே இருந்து வந்தவை எவை என பிரித்தறிய. ஆகவே வாசிப்பும் அறிதலும்தான் சிந்தனையின் அடிப்படை. நான் பலமுறை சொன்ன உவமை. நம்மிடம் உள்ள சிந்தனை என்பது ஊற்று. ஆனால் மழை இருந்தால்தான் ஊற்று வரும். கோடையில் வரும் ஊற்று மழைக்காலத்தில் பெய்த மழைதான். மழையே இல்லா சகாரா பாலைவனத்தில் ஊற்று வருவதில்லை
ஆகவே தொடர்ச்சியாக வாசியுங்கள். விவாதியுங்கள். வெற்றி அமைக
ஜெ
பி.கு: எப்போதும் ஐயாவின் பதிவுகள் பனிரெண்டு மணி முடிந்தவுடன் டான் என்று வந்துவிடும். தினமும் படித்துவிடுவேன். இன்று 10/03/2024 என் கடிதத்திற்கான மறுமொழி வந்தது. திருவண்ணாமலை புத்தகத் திருவிழாவில் பவா மற்றும் எஸ்.கே.பி கருணா அவர்களின் உரையை கேட்டு முடித்துவிட்டு அண்ணாசாலையில் உள்ள கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிக்களை கண்டுக்கொண்டு. தேநீர் அருந்த பேருந்து நிலையத்திற்கு சென்றோம். தேநீரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தரையிலிருந்து ஒரு கையளவே மேலேறியிருந்த திட்டில் அமர்ந்து ஜெ தளத்திலிருந்து வந்த மணிச் சத்ததை கேட்டு உள்ள சென்ற எனக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி இது.
Comments
Post a Comment