இந்த வாழ்வின் ஒட்டுமொத்த தேடலும் ஒரு நிரந்தர மௌனத்திற்கான தேடலா என்ன? இங்கே நிரந்தர அல்லது எல்லையற்ற மௌனம் என்பது மரணத்தை குறிப்பதல்ல. அனைத்திற்கும் மேலான பேருரு ஞானம். இங்கே "உரு" என குறிப்பிடும்போது அந்த "வஸ்து" என ஒன்று உள்ளது என்று இருப்புணர்த்தல் பெற்றுவிடுகிறது. ஆனால் தன்னிலையிலிருந்து ஒரு அனுபவம் நிகழாமல் அத்தனை எளிதாய் அந்த 'உரு' என்னவென்பதை புரிந்துக்கொள்ளவோ அல்லது உணர்ந்துக்கொள்ளவோ முடியாது. ஆதலாலேயே அவ்வனுபவத்தை இருப்புணர்த்தி 'உரு' என அழைக்கபடுகிறதேயன்றி அவ்வுணர்வு என்பது மெய்மறந்த கால எல்லையில் மௌனத்துடன் மௌனமாக பகுப்பொன்றே இல்லாத நித்தியத்துடன் கலத்தல் என்றே நினைக்கிறேன்.
பேச்சு, விவாதம், உரை, எழுத்து என எல்லாவற்றின் அந்தம் என்ன? அனுபவத்திலும் பேரனுபவம் என்ன? எல்லா செயலின் விழைவும் நித்தியத்தின் ரசவுணர்தல் என்றாவின், நித்தியம் என்பதே ஒரு வார்த்தைகளற்ற வெளி, மௌனமே புகமுடியாத நிசப்தம், சுழி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பொருத்திக்கொள்ள முடியாத சுழியாவின் எதற்கென்று இவ்வாழ்வு.
Comments
Post a Comment