எந்த ஒரு உச்ச நிலையானாலும் அது தன்னை உயர்த்தி நிறுத்தக் கூடிய உயர்நிலை வாழ்வில் எப்போதோ ஏதோ ஒரு கணத்தில் நிகழக்கூடிய ஒன்றே. ஆனால் அதையே நீட்டி முழக்கி காலவோட்டத்தில் பாய்ச்சிட்டால் அவனே கவிஞனாகிறான். அத்தகைய மேலோங்கிய கவிஞனின் உயர்நிலையின் தத்தளிப்பிலிருந்து எழுந்ததுதான் அண்டங்காளி. எந்த ஒரு கவிஞனுக்கும் அவன் தனக்கே உருவாக்கும் கவியுலகம் உண்டு. ஆனால் எந்த ஒரு கவியுலகமும் பெருங்கவியுலக திரட்டின் சுழல்வீச்சில் பாய்ந்திடும் தீப்பற்றிய பொறித்துண்டுதான். அந்த தீயின் உக்கிரமும் உஷ்ணமுமே ஒரு கவிஞனின் தன்னடையாளம். அதை இயல்பென கக்கியிருக்கிறது அண்டங்காளி. சடசடவென ஓடி மெய் அயர மூச்சிறைத்து விருட்டென நின்று பெருந்தாக பசிக்கு அபிஷேகமாய் பொழியும் பெருங்களியமுதமாய் பொழிகிறாள் காளி. பிரபஞ்சம் முழுவதும் அதன் முக்காலம் எங்கும் ஒரு நிலையாய் நிலைப்பெற்ற ஒருத்தியை கவிஞன் தன்னிலையின் நிகழ் தருணத்திற்கு அழைத்து ஒரு பின்னலாய் பின்னி மண்டியிட்டு சரணடைவதும் அதன் மூலமாக அவள் ஜோதியில் கலப்பதும் சில சமயம் அவளிடம் பெற்ற ஜோதியின் துணைக்கொண்டே அவளுடன் சரிசமமாக நிற்பதுமென ஆசை ஒரு கவி தருணத்தை அளிக்கிறார்.
ஒரு பக்கத்தில் இப்படியிருக்க கொண்டலாத்தியில் தன்னை இலகுவாக்கி சிட்டுக்குருவிகளை நேசிக்க செல்கிறார். நம்முடன் என்றும் இருக்கும் உயிராகவும் மனிதனின் கலை படிமமாகவும் என்றும் பயணிக்கும் பறவைகளிடம் தஞ்சம் புகுகிறார். கையிலேந்தி தொட்டு அரவணைத்து உதட்டு முத்தம் கோரும் பறவைளிலிருந்து தன்னையே கடந்த பிரபஞ்ச சுதந்திர பேருவாக உருவகப்படுத்தும் பறவை வரை ஆசை கவிதைகளில் பறவைகள் தன் மிளிர்வுடன் இருக்கிறன. ஒரு பயணியின் தற்கணத்தின் இளநகை வியப்பு இதிலுண்டு. அடுத்து இந்த குவாண்டம் செல்ஃபி. ஒரு அறிவியல் கவிதையாகும் போது அதில் எந்திரத்தன்மையின் வாடை விடைப்பெற்றிருக்க வேண்டும் அதற்கு விடைக்கொடுத்து ஒரு தனலின் தகிப்புணர்வுகளாக மிதவெப்பநிலையில் கவிஞனின் கவிநிலை பாயப்பட்டிருப்பதுதான் குவாண்டம் செல்ஃபி. திடுதிப்பென்று கவிதையின் நுழைவுப் புள்ளியை தொட்டு கை தடுமாறி வெற்று காமத்தில் விழ நினைப்பனை கவிதை தன் காம உலகத்தை வைத்து தூக்கி ஒத்தடம் கொடுப்பதுப்போல் கொடுத்து உணர்வூட்ட பெருக்கை ஊட்டி ஆனந்த களிப்பாட்டுகிறது. லயித்து லயித்து ருசித்துணரும் அளவுக்கு கவிச்சுவை இப்புத்தங்களில் உண்டு. ஆசையின் கவி தரிசனம் பாரதி துவக்கிய தரிசனப்பாதையில் பயணிப்பதுப்போல் இருக்கிறது. அது என்போன்ற பாரதி அன்பர்களுக்கு கூடுதல் இன்பமே.
Comments
Post a Comment