Skip to main content

சொனாட்டா - ஆண்களுக்காக ஒரு புத்தகம்

பாலுவின் சொனாட்டாவை வாசித்து முடித்தேன். இன்று நவீனத்துவம் பூதாகரித்திருக்கும் சூழலில் அது அதன் உபவிளைவுகளுடனே வருகிறது. உலகெங்கும் ஆண்மையின் அல்லாட்டங்களை இன்று  பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் சந்திக்கும் உளவியல் சார்ந்த, அடையாளம் சார்ந்த அலைக்கழிவை, அவனின் தன்னிரக்கத்தை, அவனின் சோர்வை, அவன் வீழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பதை, விழுந்தவுடனும் வீழ்த்தப்பட்டவுடனும் அவன் தன்னுள்ளே பொதிந்து சுருங்கி மனக்குமுறலை பொருவாய்கொண்டு கொப்பளிப்பதை, சிலர் தள்ளி நின்று நகைத்தும், சிலர் அவன் மேல் கற்களை வீசியும், சிலர் அவனை ஆதாயப்படுத்திக்கொண்டும், சிலர் புரிந்துக்கொண்டும் கருணைக் கூர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு வரலாறு முழுவதும் ஒரு பருவத்தில் அவர்களுக்கென ஒரு அலைக்கழிவுச் சூழல் உண்டு. தத்தளிப்பு உண்டு. அதனால் அவன் வழித்தவரலாம் தறிக்கெட்டுப்போகலாம். சமூகத்துக்கு உதிரியாகி நிலச்சுமையாகலாம். தன்னையும் தனக்கானதையும் முன்நின்று பொறுப்பேற்று எடுத்துக்கொண்டு நடத்ததெரியாத மந்தமாகலாம். காமம், போதை, சூதாட்டம் மற்றும் கழிவிறக்க வன்முறை போன்ற பல களியாட்டங்களில் மனம் செலுத்தி ஆன்ம கழிவுச் சுமைகளை மூளை பீடத்திலேற்றி நச்சாக்கலாம். இனப்பெருக்கத்திற்கு முந்தி வெற்றித்தோல்விகளை அடைந்து வெறியுணர்வாகலாம். இது தன்னியல்பாய் நிலைப்பெற்று ஓடும் சமூகத்துக்கு இழுக்கு. உதிரி ஆண்களால் சமூகத்தை குடும்பத்தை பேணி ஒன்றை பொறுப்புணர்வுடன் பாதுகாத்துக்கொள்ள தெரியாது. இச்சை திசை உடலை உந்துதல் தன்னளவிலும் சமூக அளவிலும் ஆண்களுக்கு இழுக்கென்றே எல்லா கலாச்சாரங்களும் உணர்ந்தேயிருந்தனர். ஆண்களுக்கு தன்னிலையை ஒழுங்குபடித்திக்கொள்ள சமூக கூட்டுறவுடன் ஒன்றிவாழ அவனுக்கு கடிவாளம் தேவையாகிறது. அந்த கடிவாளம்தான் ஆண்மை என்ற அடையாளத்தில் ஏற்றுப்பட்டிருப்பது.
எல்லா வகை ஆண்மைத் தன்மையிலும் ஏற்றப்பட்டுள்ள பொதுக்கூறு உணர்வுகளை கட்டுப்படுத்துதல். மனம் சமநிலை பேணுதல். உடல் கட்டி உறுதியாக்குதல். பொறுப்பை ஏற்றல்.

உயிரியல், உளவியல், பண்பாடு மேலடுக்கின் விகிதாச்சார அடிப்படையில் பங்கீடுகளை கொடுத்து அவர் அவர் சமூகங்களுக்கான ஆண்மையை ஆண்களிடத்திலிருந்து சமூகங்கள் பெற்றுக்கொண்டனர். வரலாறு எங்கிலும் ஒரு ஆண் என்றால் அவன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பண்பாடுகளும் இதுவரை வந்த கலாச்சாரங்களும் முன்கூட்டையே சில வழிமுறையை வகுத்தே வைத்தனர். அதில் அவன் தன்னை தகுதிப்படுத்திக்கொள்வதும் அதன் மூலமாக தன் சமூக இருப்பை நிச்சயப்படுத்திக்கொள்வதும். பெண் கொண்டு பிள்ளைப்பெற்று பொருளீட்டி  குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தன்னை ஓப்படைத்து தனக்கென நிச்சயமான உறவுகளை சேமித்துக்கொள்வதுமென. அவன் ஒரு அர்த்தமுள்ள சராசரி ஜீவிதத்தை கழித்து முடிக்க உத்வேகித்தன. உண்மை, சில நேர்த்தியான ஆண்களுக்கே ஆண்மையை நிருப்பிக்க முடியாமலிருந்திருக்கும். சிலவைகள் மிகக்கடினமான ஆண்மைத்தன்மையை கோரும். சிலவைகள் காத்திரமான சடங்காச்சாரியங்களையும் வதைகளையும் திணிக்கும். அவைகளை சகித்தும் நிரூபித்தும் வென்றும் ஆண்மையின் நிமிர்வால் உடல் மிளிர்ந்து தன்னை பிறிதொன்றுக்காய் ஒப்புவித்து அதை உயர்த்தி நிமிர்த்தி ஆண் வாழ்ந்து காட்ட எத்தனிப்பான். அது அந்த அந்த சமூகம், கலாச்சாரம், சூழல், நிலம், சமய‌ம், நம்பிக்கை இத்தியாதிகள் மூலமாக தன்னை வடிவமைத்துக்கொண்டாகக்கூடிய செயல்பாடு மற்றும் வாழ்வு. இதில் சில நிறைக் குறைகள் உண்டுதான். ஆனால் வரலாற்றின் எந்த காலக்கட்டதிலும் ஆண்மை என்னும் அடையாளத்திற்கு பங்கம் வந்ததில்லை. அது அவன் அடையாளம் சார்ந்த அலைக்கழிவை, சிதைவை உண்டாக்கவில்லை. இன்று ஒரு ஆண் தன்னை ஒரு ஆணான வெளிக்காட்டிக்கொள்ள அஞ்சுகிறான். ஆண் என்னும் அடையாள ஏற்பு இன்று என்னவாக இருக்கிறது என்று அவனை சமூகம் குழப்புகிறது. ஆண்மை என்ற பதமே அவனை ஆங்காரமானவனாக, தறிக்கெட்டவனாக, பெண்களை அவமதிப்பவனாக, அடிமைப்படுத்துபவனாக, கொலையாளியாக சித்தரிக்கிறது. ஒரு ஆண் அழலாம், சிதையலாம் மென்னுணர்வுக்கொண்டு தடுமாறலாம் அதை இன்று பொதுமைபடுத்திவிட்டோம். அது ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிலிருந்த தன்னை மீட்க தன்னை மீண்டும் நிலைநிறுத்த ஒரு சமூகமாக என்னத்தை அவனின் அந்த ஆண்மைக்கான பதிலீடாக நாம் வைத்தோம். பண்டைய பிரச்சினைக்கான தீர்வாக முன்வைத்து தளர்வாதம் பேசி அவனை வழிக்கெட்ட குருடனாக்கியிருக்கிறோம் . இன்று ஆண் தறிக்கெட்டவனாகியிருக்கிறான். ஊசலாடுகிறான். அதில் சிலர் மீள்கிறார்கள். சிலர் மடிகிறார்கள். ஆரோக்கியமான ஒரு அடையாள ஏற்பு இல்லாமல் போலியான நச்சு அடையாளங்களை சுமந்து சமூக அமைதி நிலையை உலுக்கி பெருங்கேடு விளைவிக்கிறான். பெண்களை துன்புறுத்துகிறான். குற்றம் செய்கிறான். போதையடிமையாகிறான். வன்முறை ஏந்துகிறான். சீரழிகிறான். இறுதியில் இதுதான் ஆண்மை, இதுதான் ஆண்கள் என்னும் பொதுமைபடுத்தலுக்குள் கூனிக்குறுகி நிற்கிறான். 

இந்த சிக்கலை உலகமின்று கண்டிருக்கிறது. உண்மையில் ஆண்மை என்றால் என்ன. வரலாறு எங்கிலும் சமூகம் அதை எப்படிப் பார்த்தது. அதை நாம் இன்று சரியாகத்தான் புரிந்துக்கொண்டிருக்கிறோமா என்பவைகளை குறித்து அறிஞர்கள் விவாதித்தும் தீர்வுகளை எடுத்துக்கொண்டும் வருகிறார்கள். அச்சிந்தனைகளின் தொகுப்பாக இந்த புத்தகமிருந்திருந்தால் எனக்கிது பத்தில் ஒன்றாக சென்றிருக்கும். இதில் அச்சிந்தனைகளின் சுவடுகள் நிறைய உண்டு. ஆனால் அவை எல்லாம் ஒருவனின் வாழ்வனுபவமாக வெளிப்படும்போது அது ஒரு நன் கோணத்தை கொடுக்கிறது. இது சமக்காலத்தில் ஆண் சந்திக்கும் பிரச்சினைக்களான காமம், காதல், போதை, வெறுமை, தளர்வு, சோர்வு என ஊசலாடும் உணர்வுகளை எப்படி அவன் கட்டுக்குள் கொண்டு வந்து மீட்டுக்கொள்கிறான் என விரிகிறது. பாலு அவர் வாழ்வனுபவங்களிலிருந்து பெற்றுக்கொண்ட கதையாகவும் இதை சொல்கிறார். இதில் சில விடுபடல்கள் இருக்கலாம். உதாரணமாக நான் மேல் குறிப்பட்ட ஆண்மை என்னும் அடையாளம் சார்ந்த சிக்கலை இதில் நீண்ட பேசுபொருளாக்கி தன்னை இந்த நாவல் விரித்துக்கொள்ளவில்லை. அதை போகிற வழியில் பார்த்துக்கொள்கிறது. மற்றபடி ஒரு இளைஞனின் அக ரீதியிலான கீழ்மைகலிருந்து போலி சிற்றின்பங்களிலிருந்து ஒருவன் தன்னை எவ்வாறு மீட்டு தனக்கான தன்னறத்தை அடைகிறான் என விரிகிறது. அவன் தன்னை கண்டடைந்த தருணம் மிக உணர்வுப்பூர்வமான தருணம். அது நீட்ஷேவின் "The individual has always had to struggle to keep from being overwhelmed by the tribe. If you try it, you will be lonely often, and sometimes frightened. But no price is too high to pay for the privilege of owning yourself" இதை எனக்கு நினைவூட்டியது. உலகத்துக்கு நம்மை
வெளிப்படுத்தி அதன் அடையாளங்களை தரித்துக்கொள்வதைவிட. தன்னை கண்டடைதலே தன்னறமென முடிகிறது. பாலுக்கு எழுத்து கைக்கூடியிருக்கிறது.
ஆயினும் இது எளிமையாக எல்லாராலையும் வாசித்து முடிக்ககூடிய அனுபவத்தைக் கொடுக்கிறது. சமகால சிக்கல்களை குறித்தான எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாதவனுக்கு இந்நாவல் அவனை கண்ணாடி பிம்பம் போல் காண்பித்துவிடும். அதே சமயம் இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக வைத்து பேசவேண்டும் என நினைக்கவில்லை. ருத்ராவின் சிறு வாழ்வனுபவமாக விரிந்தாலும். இது ஒவ்வொரு இளைஞனின் வாழ்வும்தான். சிறிய எளிய ஆனால் தேவையான அழுத்தமான புத்தகம். சரவணன் சந்திரனின் முன்னுரையை படிக்க தவறாதீர்கள்.


Comments

Popular posts from this blog

Everything is Empty

Deep down, it’s just nothing. Acknowledge you don’t have the dare to live with the realization of Emptiness. The only common thing that represents everything is — everything is inherently empty. Emptiness shows itself as absolute, but assuming the empty as absolute is itself empty. Emptiness is everywhere. Thus, everything is nothing but sameness. This sameness of Emptiness is in flux, creating its own fleeting dynamic and pattern. It’s sensed as an idea or Brahman, though not absolute. It acts as both absolute and relative, but inherently not. And thus, everything came as the way we see.

சூன்யமா? பிரம்மமா?

வாழ்வொரு சூன்யமென்று ஏற்றுக்கொள்வதில் பெரும் மன இறுக்கம் உண்டாகுமென்று ஐயப்பட வேண்டியதில்லை. உண்மையில் இதன் தலைக்கீழ் மனநிலையே நாம் அடைகிறோம். இத்தனை இத்தனையாக திரண்டிருக்கும் மனித உச்சங்கள் அதன் அதன் காரணக்காரிய உறவுகளிலிருந்து பிரித்துப்பார்க்கும்போது அதற்கே உரித்தான உறைந்திருக்கும் உள்ளார்ந்த ஒன்று என எதுவுமில்லை. அப்படியே ஒன்றை நாம் கண்டைந்ததாக கொண்டாலும் அது தன்னளவில் திரண்டதாக, காரணக்காரியம் அற்றதாக கொள்ளமுடியாது. அப்படி ஒரு தேடல் நம்மை சூன்யத்திற்கே இட்டுச்செல்கிறது. சூன்யத்திற்கு செல்வதென்பது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்வது போன்றதல்ல. அப்படியோரு விழைவே சூன்யமானது. சூன்யமே பூகமுடியாத சூன்யம்(பிரக்ஞை மூலமாக தொடமுடியாத). மனித விழைவு எல்லைக்குட்பட்டது. பிரபஞ்சம் எல்லையானதானால் ஒட்டுமொத்த மானுடத்தேடல் தின்றுத்திர்க்க தர்கத்திற்காகவேணும் ஒரு காலவரையரையை வைக்கலாம். இறுதியில் சூன்யமே எஞ்சும். பிரபஞ்சம் எல்லையற்றதானால் மானுடமும் எல்லையற்று தன்னை இறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு விவாதம் இப்போதிக்கு சாத்தியமில்லை.  அனைத்திலும் அறியமுடியாத சூன்யமும், அறிந்தாலும் எஞ்சக்கூடிய சூன்...

நிசப்தம்

இந்த வாழ்வின் ஒட்டுமொத்த தேடலும் ஒரு நிரந்தர மௌனத்திற்கான தேடலா என்ன? இங்கே நிரந்தர அல்லது எல்லையற்ற மௌனம் என்பது மரணத்தை குறிப்பதல்ல. அனைத்திற்கும் மேலான பேருரு ஞானம். இங்கே "உரு" என குறிப்பிடும்போது அந்த "வஸ்து" என ஒன்று உள்ளது என்று இருப்புணர்த்தல் பெற்றுவிடுகிறது. ஆனால் தன்னிலையிலிருந்து ஒரு அனுபவம் நிகழாமல் அத்தனை எளிதாய் அந்த 'உரு' என்னவென்பதை புரிந்துக்கொள்ளவோ அல்லது உணர்ந்துக்கொள்ளவோ முடியாது. ஆதலாலேயே அவ்வனுபவத்தை இருப்புணர்த்தி 'உரு' என அழைக்கபடுகிறதேயன்றி அவ்வுணர்வு என்பது மெய்மறந்த கால எல்லையில் மௌனத்துடன் மௌனமாக பகுப்பொன்றே இல்லாத நித்தியத்துடன் கலத்தல் என்றே நினைக்கிறேன்.  பேச்சு, விவாதம், உரை, எழுத்து என எல்லாவற்றின் அந்தம் என்ன? அனுபவத்திலும் பேரனுபவம் என்ன? எல்லா செயலின் விழைவும் நித்தியத்தின் ரசவுணர்தல் என்றாவின், நித்தியம் என்பதே ஒரு வார்த்தைகளற்ற வெளி, மௌனமே புகமுடியாத நிசப்தம், சுழி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பொருத்திக்கொள்ள முடியாத சுழியாவின் எதற்கென்று இவ்வாழ்வு.  ஒருவேலை வாழ்வின் சாரமே எல்லையற்ற நிசப்தம்தானோ.