பொதுவாக எனக்கு கைப்பேசி தட்டச்சில் நிறைய எழுத்துப் பிழைகள் வரும். மீ்ண்டும் படித்துப்பார்த்தாலும் பிழைகள் கண்களுக்கு படாது. பிழைகளுடனே ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். மீண்டும் சரி செய்தும் அனுப்பினேன். அவர் கண்ணில் பிழையானது பட்டுவிட்டது. பரவாயில்லை. கடிதத்தின் மறுமொழிக்காக காத்திருந்த எனக்கு அதிர்ச்சி. எப்போதும் ஐயாவின் பதிவுகள் பன்னிரண்டு மணி முடிந்தவுடன் டான் என்று வந்துவிடும். தினமும் படித்துவிடுவேன். இன்று 10/03/2024 என் கடிதத்திற்கான மறுமொழி வந்தது. திருவண்ணாமலை புத்தகத் திருவிழாவில் பவா மற்றும் எஸ்.கே.பி கருணா அவர்களின் உரையை கேட்டு முடித்துவிட்டு அண்ணாசாலையில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு தேநீர் அருந்த பேருந்து நிலையத்திற்கு சென்றோம். தேநீரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தரையிலிருந்து ஒரு கையளவே மேலேறியிருந்த திட்டில் அமர்ந்து ஜெ தளத்திலிருந்து வந்த மணிச் சத்தத்தை கேட்டு உள்ளே சென்ற எனக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி இது. அது அவரின் மறுக்கடிதம். தொடர்ந்து அவருடன் உரையாட நினைப்பதால் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கடிதம். ஆச்சரியம் என்னவென்றால் இன்றுதான் அவர் திருவண்ணாமலைக்கு வருவதாக இருந்தார். அவரை சந்திக்க வேண்டுமென மிக ஆவலாக காத்திருந்தவன் நான்.
காலை பத்தரை மணிக்கு துவங்க இருக்கும் அகரமுதல்வனின் "போதமும் காணாத போதம்" நூல் வெளியீட்டு விழாவிற்கு ஒன்பதரை மணிக்கு சென்று அமர்ந்துக்கொண்டேன். யாருமில்லை என்பதால் நானும் என்னுடைய மாமன் மகனும் வெளியில் வந்தோம். சாப்பிட எதாவது இருக்கிறதா என்று ஒரு கடையை கவனித்து அங்கே உணவு எதுவும் செய்தில்லாத பட்சத்தில் இறுதியில் அருகே இருக்கும் தேநீர் கடையில் இரண்டு தேநீர் சொன்னோம்.
சில ஆட்கள் ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொண்டிருந்தனர். கடைக்கு உள் வாட்டத்தின் மூலையில் ஒரு நாற்காலியில் ஆயாசமாக சாய்ந்து செக்கச் செவேலென்று ஒரு
வேற்றுலக தேவதை எதுவும் தெரியாதது போல் அமர்ந்து செய்தித்தாள்களை படித்துக்கொண்டிருந்தது. ஆம். அது ஜெயமோகன்தான். அறிவுலகத்தின் தூதன். இமயமலையின் நிசப்தமும் வானத்தை முட்டும் உயரமும் பனி பிரதிபலித்த சூரியவொளியுமாக ஒரு சேர காட்சியளித்தார். என் உடன் வந்தவனுக்கும் ஆச்சரியம். அவனுக்கு வாசிப்பு எழுத்தாளர்கள் இலக்கியம் எதுவும் நுனியளவும் பரிச்சயமுமில்லை. ஆனால் இந்த மனிதர்கள் எதையோ செய்கிறார்கள் என்பதை புரிந்துக்கொண்டவன். நான் என் உள்ளத்தில் ஜெயமோகனுக்கு கொடுத்த உயரத்தை பார்த்து அவன் ஏதோ பெருங் கற்பனையிலிருந்திருக்கிறான். ஒரு காரில் வந்து மாஸ் ஹீரோ இறங்குவதுப்போல் இறங்கி படைகள் சூழ வேகவேகமாக உள்ளே சென்று எல்லாம் தடால் புடாலென்று நடக்குமென்று. ஆனால் எந்த ஒரு அலட்டல்களும் இல்லாமல் எதுவும் தெரியாத பச்சை பிள்ளை போல் அவர் வேலையை செய்துக்கொண்டிருந்தார். நான் அவரை தொந்தரவு செய்ய வேண்டாமென்று ஓரமாக நின்று அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பால் சர்க்கரை இல்லாத டிகாஷன் குடித்தார். முடித்துவிட்டு நண்பர்களிடத்தில் பேசி எழுந்து சென்றார். விஸ்வரூபம் படத்தில் கமல் பின்லேடனை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
உள்ளே சென்று அவர்கள் அமர்ந்து நண்பர்களாக பேசிக்கொண்டிருந்தார்கள். இச்சமயத்தில் சென்றால் ஐஏஎஸ் நேர்முகத் தேர்வுக்கு சென்று நிற்பது போலிருக்குமென்று தயங்கி செல்லவில்லை. உரைகள் எல்லாம் முடிந்து எல்லாரும் ஒரு குழுவாக புகைப்படம் எடுத்து அவர் கீழிறங்கி வரும் தருவாயில் கூட்டத்தை முந்திக்கொண்டு அவரிடம் கையெழுத்து வாங்க அவரை நிறுத்தி இன்றைக்கு உங்கள் தளத்தில் பதிவேற்றியது என் கடிதத்தை தான் நான் சுரேன் சாத்ராக் என அறிமுகப்படுத்திக்கொண்டேன். 'ஒ' என்று கூறி உடனே கைப்பேசியை எடுத்துப்பார்த்து அருகிலிருப்பவர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். சைதன்யாவிடமும்
அறிமுகப்படுத்தினார். எல்லாருக்கும் வணக்கம் செய்தேன். ஆனால் எண்ணம் இவரிடமிருந்து நகரவில்லை. "இவரு ஒரு யூடியூப் வச்சிருக்காரு. நம் தளத்தில் இன்று அவரை பற்றித்தான் போட்டிருக்கோம். ஓர் உரையாடல் என்னும் தலைப்புல" என்றார். "எனக்கு எழுத்துதான் முக்கியம் ஆனால் யூடியூப் செய்ய வேண்டியதாக இருந்தது" என்று சொல்லுவதற்குள் வாய் குளறியது. உண்மையில் எனக்கு பொதுவாகவே இந்த பிரச்சனை உண்டு. யாரிடமாவது பேசும் போது இடையில் நிறுத்தி நிறுத்தி பேசுவது. சில சமயம் குளறவும் செய்யும். பழகிவிட்டால் பிரச்சனையில்லை. ஆனால் அறிவாசான் முன்பு என்னத்தை பேசுவது. உண்மையில் எழுத்தில் இயங்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஆனால் கொஞ்சம் ஜனரஞ்சக பார்வையாளர்களுடனும் உரையாடவேண்டும் என்னும் எண்ணமுமிருந்தது. முக்கியமாக கொஞ்சம் சென்று சேர்ந்தால் அதிலிருந்து கொஞ்சமாவது பணம் வரட்டுமே என்னும் எண்ணமும் இருந்தது. சுத்தமாக துடைத்தெறியப்பட்ட பொருளாதார சூழல் எங்களுடையது. முக்கியமாக என்னுடன் சேர்ந்து என் மாமன் மகனும் நேரத்தை செலவிடுகிறான். ஆனால் நம் சேனலுக்கு அதுவெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடவாது என்று தெரியும். அதற்காக என்னை நான் துரிதப்படுத்திக் கொள்ளவும் இல்லை. பணத்திற்காகவென்று சமரசம் செய்துக்கொள்ளவுமில்லை. ஆனால் ஜனம் கொஞ்சம் சிந்தனை சூழலுக்குள் வந்தால் நலமென்று கருதுவதால் சில தளர்வுகள் இருக்கும். கையெழுத்திற்காக அறம் புத்தகத்தை எடுத்தேன். இரண்டு வைத்திருந்தேன். பையில் வைத்திருந்த பேனாவை காணவில்லை. ஜெ வந்தால் கையெழுத்து வாங்க வேண்டுமென்றே எடுத்து வைத்தது அது. சூழ இருந்த ஒரு ஐந்து பேரிடம் கேட்டிருப்பேன். அவர்களிடமும் இல்லை. அவ்வளவு நேரமும் அவர் நின்றுக்கொண்டிருந்தார். அவருக்கு தர்மசங்கடத்தை கொடுத்திருப்பேனா எனத் தெரியவில்லை. இறுதியில் ஒருவர் வந்தார் அவரிடம் வாங்கி கையெழுத்து பெற்றுக்கொண்டேன். சாப்பிட சென்றுக் கொண்டிருந்தார். நன்றிக் கூறி அப்போதைக்கு விடைப் பெற்றேன். அவர் சென்றதற்கு பின்பு தேடியதில் என் பாக்கெட்டில்தான் பேனா இருந்தது.
அனைவரும் சாப்பிட்டோம். முடிந்ததும் அவருக்காக மீண்டும் காத்திருந்தேன். புகைப்படம் கேட்டேன். எடுத்துக்கொண்டோம். என்ன என்னவோ பேச எண்ணம் தோன்றியது முக்கியமாக ஸ்லாவாஜ் சிசெக், கிட்டாரோ நிஷிடா, செகுலரிசம், இஸ்லாம், இந்து மதம் பௌத்தம், கிருஸ்துவதம் என. ஆனால் எதற்கும் அவருக்கு நேரமிருக்காது. அவரின் நேரத்தையும் விரயம் செய்யக்கூடாது என சுருக்கமாக பேசி விடைப்பெற்றேன். கமல் பின்லேடனை பார்த்ததுப்போல இருந்தது என்றேன். நன்றாக சிரித்தார். உங்கள் எழுத்துக்கள் மூலமாக என்னை அடையாளம் கண்டுக்கொண்டேன். "அலைக்கழிவை வாழ்வின் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டு நகரும் ஒரு பருவத்தில் இருக்கிறேன் புத்தகம் வாங்க கூட பணமில்லாத சூழல். சிறுக சிறுக சேமித்து வாங்குகிறேன் ஒரு புத்தகத்திற்கே" என்றேன். உண்மையில் எல்லா புறம் எனக்கு அலைக்கழிப்புதான். வாழ் ஒரு சூன்யமென்று தோன்றுமளவுக்கு. "உங்களிடம் நிறைய பேசவேண்டும். ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன். இப்போ உங்களின் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை" எனக்கூறி விடைப் பெற்றேன். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டார்.
பிரபலங்களை நாம் நேரில் சந்தித்து அதை ரொமான்டிஸைஸ் செய்வதில் எனக்கு கடுகளவும் உடன்பாடுமில்லை. ஆனால் ஜெ ஒரு வெற்று சினிமா பிரபலமில்லை. வெற்று எழுத்துலக பிரபலமில்லை. மானுட கனவிற்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்து பங்காற்றி ஒரு பெரும் இலட்சியவாதத்தையும் எழுத்துக் கொடையையும் கொடுத்துக்கொண்டிருப்பவருக்கு நான் என் சின்ன அன்பையாவது வெளிப்படுதிக்கொள்ள வேண்டாமா?
Comments
Post a Comment