கேள்வி:
மகாத்மா காந்தியை பற்றிய ஒரு சிறு சந்தேகம்
அதாவது அவரை ஒரு கொள்கை வாதியாக அனைவரும் பாராட்டுகிறோம் அதாவது அஹிம்சை மற்றும் தீண்டாமை என வற்றில் ஆனால் அவரை பற்றிய சில negative உம் சொல்ல படுகிறது... அம்பேத்கர் மற்றும் பெரியாரும் கூட அவரது உடன் ஒத்து போகவில்லை சில காரணத்தினால், மற்றும் காந்தி மதத்தை நம்புபவர் அது ஆத்மா ஓடு இணைந்தது என்று கூறுகிறார் அதனாலேயே அம்பேத்கர் உடன் கருத்து வேறுபாடு நடந்தது.....
What about your perspective
பதில்:
உங்கள் கேள்விகளில் உள்ள அனைவரை பற்றியும் நான் மிகத்தீவரத்துடன் படித்துவந்திருக்கிறேன். மோடி வந்தபின் இந்துத்துவ அலை இந்தியாவில் பரவலாக வீசத்தொடங்கியபோது தமிழ் அரசியல் சூழலில் அதற்கு எதிர் கருத்தியல்வாதத்தை முன்மொழியும் பேரில் திராவிட கொள்கை அதித்தீவிரமாக பரவலாகபட்டது. அது வெற்றியும் கண்டிருக்கிறது. அந்த அலையின் பாதிப்பில் மூழ்கியவனில் நானும் ஒருவன். அவர்களை பொருத்தவரை திராவிட சிந்தாத்தம் பெரியாரிலிருந்தே துவங்குகிறது.
இவர்களின் political ideology-யுடன் கொஞ்சம் தொடர்புடையவர்களை இவர்களுடன் தேர்த்துக்கொண்டார்கள் அதில் அம்பேத்கர் கார்ல் மார்க்ஸ் அடக்கம்.
இவர்களெல்லாம் ஒன்று திரண்டு வரலாறு என்பது ஒடுக்குபவனாலும் ஒடுக்கப்பட்டவனாலும் ஆனது.
ஆக ஒடுக்கும் சக்தி எதுவாக இருப்பினும் அதை தூக்கி எறியவேண்டுமென புரட்சி கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தார்கள். அதில் நானும் ஒருவன். சாதி மதம் இனம் மொழி என்று மனித வாழ்வில் இறுகி ஊறி இருக்கும் எல்லாவற்றையும் கண்மூடி தூக்கி எறிந்து விட்டால் புத்துலகை கண்டடையலாம் என்று குரல் கொடுத்தார்கள். நானும் கொடுத்தேன்.
இதிலிருக்கும் சிக்கல் என்னவென்றால் என் ideology-க்கு ஒத்துவராத எதையுமே நான் தூக்கி எறிவேன் என இருப்பது. இவர்கள் செய்வதெல்லாம் பெரும் கட்டுடைப்பு. இவர்களிலிருந்து பெற்றுக்கொள்ள பெருசாக ஒன்றும் இருக்காது. விமர்சனத்தை ஏற்றுக்கொள்வோம் என்பதெல்லாம் பச்சை போய். நாணயத்தின் இருபக்கம் போலத்தான் மதமும் (Religion) அரசியல் கொள்கையும் (ideology). தன்னை விடிவெள்ளியாக புரட்சியாளனாக உணர வைக்கும் இந்த ideology உண்மையில் சமூகத்தளத்தில் எவ்வளவு பாதிப்பை உண்டாக்குமெனவும். உளவியல் ரீதியாக அவன் இந்த உலகத்தையும் வரலாற்றையும் எவ்வளவு திரிபுகளுடனும் முன்முடிவுகளுடனும் பார்ப்பான் என்பதை மேற்கில் மீள மீள பேசியாகிவிட்டது.
இவர்களுக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களின் குற்றச்சாட்டு நியாயமா இல்லையா என்பதைக்கூட ஆராயத்தெரியாமல்
மடித்து கட்டிக்கொண்டு சண்டைக்கு கூட வந்துவிடுவார்கள். மட்டுமல்லாமல் அவனுக்கு இந்துத்துவவாதி. பார்ப்பனீயன். சாதியவாதி. பாஜகக்காக வாதி என பல முத்திரைகள் குத்தப்பட்டுவிடும்.
இன்றைய தேதியில் எனக்கு பிடித்த பாரதி நேரு காந்தி எல்லாரும் இவர்களின் பார்வையில் சாதியவாதிகள்தான். பாரதி ஆராய்ச்சியாளர்கள் மீள மீள விளக்கிவிட்டார்கள். திராவிட சித்தாந்த வாதிகளின் குற்றச்சாட்டெல்லாம் பெறும் காழ்பும் முன்முடிவும் கொண்டதென்று.
நானும் பலருக்கு முத்திரை குத்தியிருக்கிறேன். அப்படி குத்தியவர்களில் ஒருவர்தான் காந்தி. தீவிர இடதுசாரியாக (Left wing) இருப்பவனுக்கு அம்பேத்கார் மற்றும் பெரியார் இருவரின் காந்தி மீதான விமர்சனம் போதும். இன்றைய தேதிக்கு எடுத்தப்பார்த்தாலும் அம்பேத்காரின் விமர்சனம் அவ்வளவு காட்டமாக இருக்கும். பெரியார் அவர்பாணியில் இன்னும் போட்டு உடைத்திருப்பார்.
இந்த one sided view-யை மட்டுமே எடுத்துக்கொண்டு அவர்களால் மிக தைரியமாக வரலாற்றை எடுத்துப்பேச முடிகிறது. கல்லூரியில் என்னுடன் படித்தவர்களை கேட்டால் என்னைப்போல் காந்தியை உடைத்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்வார்கள். அவ்வளவும் காழ்பும் முன்முடிவும் மட்டுமே.
காந்தி ஒன்றும் கட்டிக்காக்க வேண்டிய பிம்பமில்லை அவர்களை போல எந்த ஆளுமையையும் காப்பாற்ற வேண்டிய சுமை எனக்கில்லை. அது காந்தியாக இருந்தாலும் சரி.
காந்திக்கே அந்த சுமை இருந்ததில்லை. தன் வாழ்நாள் முழுக்க உள்ளூர் மற்றும் உலகலாவிய அளவில் பல சிந்தனையாளர்களுடன் காந்தி உரையாடிக்கொண்டே இருந்தார். விமர்சனங்களை தொடர்ந்து வரவேற்றுக்கொண்டே இருந்தார்கள். அதை செயல்முறை படுத்திப்பார்த்து தன்னையும் தொடர்ந்து மாற்றிக்கொண்டே வந்தார். காந்தி தன் ஒவ்வொரு நிலையிலிருந்தும் மாறிக்கொண்டே இருந்தபோது இந்தியாவே கூட சேர்ந்து மாறியதென்பதே உண்மை.
ஏனெனில் காந்திக்கு மக்கள் ஆதரவு அளவுக்கடந்தது. துவக்கத்தில் பெரும் பார்ப்பனர்களாகவே அதிகாரத்திலிருந்த காங்கிரஸில் ஒரு தாழ்த்தப்பட்டவன் இந்திய அரசியல் சட்டத்தை தீர்மானிக்க முடியும் என்று யோசித்திருக்க முடியுமா. சுதந்திரத்திற்குபின் சட்ட அமைச்சராக அம்பேத்காரை நேரு தீர்மானிக்கிறார். பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே செய்தாலும் இந்த மிகப்பெரும் மனமாற்றம் நிகழ்வை உண்டாக்கியது காந்தி. காந்தியாலேயே இந்துத்துவ சக்தி பயங்கரமாக அதிகாரிங்களிலிருந்து மட்டுப்பட்டது. காந்திக்கு எல்லா தரப்பிலிருந்தும் எதிர்ப்புதான். இன்றுவரையிலும் எந்த ஒரு தரப்பும் காந்தியை தன்னவராக கருதுவதேயில்லை. அன்றும் செய்ததில்லை. அன்றைய தேதிக்கு காந்திக்கு இருந்த ஒரே செல்வாக்கு மக்கள் பலம்தான்.
எந்த ஒரு அதிகாரமும் பலமும் இல்லாத எழை எளிய மக்களே காந்தியை தன்னவராக கொண்டாடினர். காந்தியின் சிந்தனை கடைசி வரை எளியவர்களை நோக்கி மட்டுமே இருந்தது. வெளியிலிருந்து புதிது புதிதாக வந்துக்கொண்டே இருந்த சிந்தனைகளை நம்மவர்களையும் தழுவின. அம்பேத்காரின் வரலாற்றுப்பார்வை என்பது ஒரு வகையான Historical positivism கொண்டது. நேரு சோவியத்தை புகழ்ந்துக்கொண்டே இருந்தார். ஆனால் காந்திக்கு மட்டுமே இந்திய தத்துவம் மற்றும் மெய்ஞானத்திற்கே இவ்வளவு வளமும் வரலாறும் இருக்கும்போது இவர்கள் ஏன இப்படி ஐரோப்பிய சிந்தனை மோகம் கொண்டிருக்கிறார்கள் என்னும் கேள்வி வந்தது.
அவ்வளவு ஞான வளங்களையும் தத்துவத்தையும் ஒருங்கே தாங்கிக்கொண்டிருந்த ஆழ்தொன்மம் கொண்ட வளமிக்க தூண்களாக நின்றுக்கொண்டிருந்து இந்து மதம் மட்டுமே. இந்து மதம் - இந்துவியல் - இந்துத்துவா என்னும் பிரிவில் காந்தி கண்டடைந்த இந்துத்துவம் என்பது இந்துவியல். அதன் வளத்தையும் ஞான தரிசனத்தையும் காந்தி வாழ்நாள் முழுக்க பின்பற்றினார் என்பதே உண்மை. இந்து மதம் என்பது புழக்கத்தில் நிகழ்வது. அதில் நல்லவைகளிலிருந்து எல்லா தீமைகளும் அடங்கும். இந்துத்துவா என்பது RSS-களுடையது. இந்துவியல் என்பது அறிஞர்கள் மற்றும் ஞானிகளுடையது. அதற்கென்று மாபெரும் மரபு உண்டு. அம்பேத்காரே அதைக்குறித்து அதிகம் மரியாதையுடன் இருந்தவர். பெரியாருக்கு அப்படி ஒன்று இருந்திருப்பது தெரிந்திருக்குமா என்றுக்கூட தெரியவில்லை.
அதேசமயத்தில் காந்தி ஜனநாயகவாதி. அது அவர் ஐரோப்பாவிலிருந்து கற்றது. ஐரோப்பிய ஜனநாயகவாதத்தைக்கொண்டே ஐரோப்பிய காலனியாதிக்கைத்தை எதிர்த்தார் என்பதே உண்மை.
ஐந்தாயிரம் ஆண்டுகளாக நிலவுடைமை சமூகத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்துக்கதை மக்களையும் எந்த ஒரு சப்தமுமே இல்லாமல் ஜனநாயகத்தை நோக்கி நகர்த்திய மாபெரும் சக்தியாக இருந்தது காந்தி. ஆரம்பக்காலங்களில் சாதியும் வரணமும் இருப்பதற்கு எதேனெனும் சமூக அறிவியல் காரணம் இருக்க வேண்டுமென நினைத்தார் இல்லையெனில் அது இவ்வளவு தூரம் நின்றிருக்காது என நினைத்தார். ஆனால் அதிலிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கலைய வேண்டுமென நினைக்கிறார்.
இதை புரட்சியாளர்களால் புரிந்துக்கொள்ள முடியாது அதை வைத்துக்கொண்டு இதை எப்படி செய்வீர்கள் என கேட்பார்கள். ஆனால் ஜனநாயகத்திற்கு முன்பு அப்படி ஒரு சிந்தனை இருந்திருக்கிறது. பாரதியே அதைக்குறித்து எழுதியிருக்கிறார்.
தொழில் சார்ந்து பிரிக்கப்பட பிரிவில் இடையில் நுழைக்கப்பட்டதே இந்த ஏற்றத்தாழ்வெல்லாம். ஆக இவற்றில் எப்படி மாற்றம் கொண்டு வரவேண்டுமென நினைத்தார்களேயன்றி இன்றைய புரட்சியாளர்கள் சொல்வதுப்போல் மொத்தமாக தூக்கி எறிய நினைக்கவில்லை. அப்படி தூக்கி எறியவும் முடியாது அன்றைய தேதிளில் அப்படி ஒருத்தன் நினைத்தானே என்றால் அவன் முழு மடையனாகவே இருந்திருப்பான்.
ஜனநாயகத்தை மெல்ல மெல்ல மக்கள் ஏற்றுக்கொள்வதை காந்தி பார்க்கிறார். இந்த நகர்வின் முடிவில் காந்தி தன் வாழ்வின் இறுதியில் இனிமேல் இந்திய சமூகத்திற்கு சாதி தேவையில்லை என்னும் முடிவை எட்டுக்கிறார். இதற்கு மிக முக்கியமாக அவருக்கு உதவிகரமாக இருந்தது அம்பேத்காரின் சிந்தனைகளே. அம்பேத்காருடனான அவரின் தொடர் உரையாடல்களே காந்தியை இந்த சிந்தனையை எட்டச்செய்தது. அம்பேத்காரும் காந்தியிடம் நிறைய கற்றிருக்கிறார். முக்கியமாக அஹிம்சை. வன்முறையை கையிலேந்தி போராடக்கூடய அனைத்து உரிமையும் உள்ள ஒரே தரப்பு அம்பேத்காருடையது. ஆனால் அவர் அஹிம்சை வழியிலேயே போராடுகிறார். அதற்கு முக்கிய காரணம் காந்தி.
பெண்களை அடுப்படியிலிருந்து வெளியேற்றி மையநீரோட்ட அரசியலுக்கு வரவேற்றவர் காந்தி.
இந்தியா முழுக்கவுள்ள எல்லா தலித்களையும் நேரே சென்று அவர்களின் வாழ்வியலை அறிந்தவர் காந்தி. பூனா ஓப்பந்ததில் அம்பேத்கருக்கு எதிராக சாகும் வரை உன்னாவிரம் இருந்ததை வைத்து இன்று வரை காந்தி வசைப்பாட படுகிறார். இவர்கள் கோருவதுப்போல் இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கு இருந்தால் இந்தியா சுதந்திரத்திற்குபின் உயர் அதிகாரங்கள் எல்லாம் இந்துத்துவர்கள் கையில் சென்றுவிட்டபின் தலித்துகள் மீண்டும் கைவிடப்படுவார்கள் என்று காந்தி அன்றைய தேதியிலேயே தீர்க்கதரிசனமாக உணர்ந்திருந்தார்.
இது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியாகவே பார்த்தார். அதற்கு முக்கிய காரணம் இதேப்போல் முன்பொருமுறை நடந்த இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கான இரட்டை வாக்குரிமை இருத்தரப்பினரையும் எவ்வளவு தூரம் இந்தியாவை உடைத்துப்போட்டுக்கொண்டிருக்கிறது என அவர் அறிந்ததுதான். அம்பேத்காருக்கு அவரின் பிரிட்டன் சாய்வு அதை யோசிக்க விடவில்லை எனபதே உண்மை. யோசித்துப்பாருங்கள் அது மட்டும் நிகழ்ந்திருந்தால் இன்றைக்கு அம்பேத்காரியே வசைப்பாடியிருப்போம். இஸ்லாமியர்களுக்கு காந்தி கொடுத்த அதரவு அவர் உயிரையே பணையவைத்தென்பது வரலாறு.
பெருந்தலைவர்களை பொருத்தவரை முக்கியமாக காந்தி நேரு அம்பேத்கார் போன்றோர் ஒருவரை ஒருவர் முட்டி மோதி உரையாடி சண்டையிட்டு சமரசமடைந்து ஒருவரையொருவர் கண்டைந்தவர்கள். அவர்களை எந்த ஒரு அரசியல் காழ்புக்கும் இடங்கொடுக்காமல் சுத்த தெளிவுள்ள மனதால் மொத்தமாக தொகுத்துப் புரிந்துக்கொள்ளுதல் அவசியம். ஒருவரின் பார்வையை வைத்தே வரலாறை புரிந்துக்கொள்ள கூடாது. அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. காந்தியாகவே இருந்தாலும் சரி.
Comments
Post a Comment